Nagaratharonline.com
» All
» Chettinad Toursim
» Chettinad Temples
Chettinad Temples
     

கும்பகோணம்

முன்னொரு காலத்தில் மிகப்பெரிய பிரளயம் உண்டாகி, உலகமே அழியும் தருணம் ஏற்பட இருந்தது. இதை தன் ஞானத்தால் அறிந்த பிரம்மன், சிவப்பெருமானிடம் முறையிட, அதற்கு ஈசன், “நீ எதற்கும் கலங்காதே. பிரளயம் எற்பட்டாலும் மீண்டும் அனைத்து ஜீவராசிகளும் உருவாகும்.” என்று கூறி, ஒரு கும்பத்தை கொடுத்து, “இதில் நீ படைத்த அனைத்து ஜீவராசிகளின் மூல காரணமாக இருக்கும் வித்துக்களை இதனுள் வைத்து விடு. அத்துடன் புராணங்களையும், மந்திரங்களையம் அதனுடன் வைத்து பூஜை செய். பிறகு அந்த கும்பத்தை மேரு மலையில் வைத்து விடு. அதன் பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்றார் பிரம்ம தேவரிடம் சிவபெருமான்.

சிவபெருமானின் உத்தரவின்படி செய்தார் பிரம்ம தேவர். சில நாட்களுக்கு பிறகு மிகப் பெரிய பிரளயம் ஏற்பட்டு உலகமே அழிந்து போனது.

மேருமலையில் பிரம்மன் பூஜித்து வைத்த கும்பம், தண்ணீரில் மிதந்து வந்து ஒரு இடத்தில் நின்றது. அந்த இடத்தில் சிவப்பெருமான், ஒரு வேடன் உருவத்தில் வந்து, அந்த கும்பத்தை நோக்கி அம்பு ஏய்தபோது கும்பத்தின் கூம்பு போன்ற கோணப்பகுதி உடைந்தது.

அந்த கும்பம் தண்ணீரில் மிதந்து வந்த இடமும், வேடன் உருவத்தில் சிவப்பெருமான் கும்பத்தின் ஒரு மூக்கு போன்ற கோணப்பகுதி உடைத்த இடமும் ஒரே இடம் என்பதால், அந்த இடத்திற்கு “கும்பகோணம்” என்று பெயர் உண்டானது.

கும்பம் உடைந்தபோது அதில் இருந்து அமுதமும் வெளியேறியது. அந்த அமுதம் நனைத்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி, அதில் சர்வேஸ்வரர் ஐக்கியமானார். இதனால் அந்த சிவலிங்கம், “ஆதி கும்பேஸ்வரர்” என்று அழைக்கப்படுகிறது. கும்பத்தின் மூக்கு உடைந்த இடம் என்பதால் கும்பக்கோணம், “குடமூக்கு” என்ற பெயரும் பெற்ற ஸ்தலம் ஆகும்.

மாசி மகம் அன்று கும்பகோணத்தில் விசேஷமாக கொண்டாடுவார்கள். அதேபோல், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா மிகவும் புகழ் பெற்றது.

மாசி மகத்திற்கு சக்தி அதிகம்

மாசி மகத்திற்கு சக்தி அதிகம் என்பதை மற்றவர்கள் உணர்வதற்கு முன்னே புண்ணிய நதிகள் என்று சொல்லக்கூடிய கங்கை, காவேரி, யமுனை போன்ற பல புண்ணிய நதிகள் உணர்ந்தார்கள்.

ஒருவருடைய கஷ்டத்தை கேட்டுக்கொண்டே இருந்தால் கேட்பவர்களுக்கும் அந்த கஷ்டம் வரும். அதனால்தான் நம் முன்னோர்கள் கூறுவார்கள், “ஒருவரை பார்த்து “ஐயோ பாவம்” என்றால், சொல்பவர்களுக்கு ஈரேழு ஜென்மபாவங்கள் தேடி வரும். அந்த அளவில் சக்திபடைத்து துஷ்ட தேவதை. துஷ்டதேவதைதான் கஷ்டத்தை தருவது. இந்த துஷ்ட தேவதை மனிதர்களிடம் மட்டும் தன் வேலையை காட்டுவதில்லை. பலருடைய பாவங்களை தீர்க்கும் புண்ணிய நதிகளிடத்திலும் தன் வேலையை காட்டியது. ஆம். பலருடைய கர்மாக்களை புண்ணிய நதிகள் நீக்கியதால், நதி தேவதைகளின் உடல் கருமையாக மாறி கஷ்டத்திற்கு ஆளானார்கள். இந்த நிலை தீர என்ன செய்ய வேண்டும்? என்று சிவபெருமானிடம் கேட்டார்கள்.

அதற்கு இறைவன், “நீங்கள் மாசி மாதம் மக நட்சத்திரத்தில் கும்பகோணம் மகா மகக்குளத்தில் நீராடினால், உங்கள் பாவங்கள் நீங்கும்.” என்றார்.

சர்வேஸ்வரன் கூறியது போல், மகாமககுளத்தில் நீராடி தங்களுடைய பாவத்தை போக்கிகொண்டார்கள் அந்த புண்ணியநதி தேவதைகள்.

பாவம் தீர கங்கை, யமுனை போன்ற புண்ணிய நதியில் குளித்தால் ஒருவருடைய கர்மாக்கள் நீங்கும் என்பார்கள். ஆனால் அங்கேயே பிறந்தவர்களின் கர்மபயன் தீர வேண்டும் என்றால், கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடினால்தான் நீங்கும் என்கிறது புராணம். எப்படி மருத்துவர் தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாதோ, அதுபோல்தான், “எந்த புண்ணிய நதிகரையில் பிறந்தவர்களாக இருந்தாலும், மகாமககுளத்தில் நீராடினால்தான் கர்மாக்கள் நீங்கும்.” என்கிறது சாஸ்திரம்.

புண்ணிய நதியில் நீராடினால் கர்மபயன் நீங்குமா? என்ற சந்தேகத்தோடு நீராடக்கூடாது. இதற்கு ஒரு கதை இருக்கிறது

ஒரு முனிவர் இருந்தார். அவர் பல வருடங்களாக மக்களுக்கு உபதேசங்கள் செய்து வந்தார். ஒருநாள் கருடன் பறக்கும்போது தன் சிறகு இழந்து, அந்த முனிவர் காலில் வந்து விழுந்தது. இதை கண்ட முனிவர் தன் கமண்டலத்தில் இருந்த நீரை அந்த கருடன் மேல் தெளித்தார். உடனே அது வலிமை பெற்று பறந்து சென்றது. இதை கண்ட பக்தர்கள், “சாமி உங்களிடம்தான் நாங்கள் தினமும் உபதேசம் கேட்கிறோம். எங்களுக்கும் உடல் உபாதைகள் வந்தபோது, நீங்களே எங்களை குணப்படுத்தி இருக்கலாமே.” என்றார்கள்.

அதற்கு அந்த முனிவர், அந்த கருடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னிடம் சரண் அடைந்தது. நான் அதை குணப்படுத்துவேனா அல்லது மாட்டேனா? என்ற சந்தேகம் அந்த கருடனுக்கு இல்லை. அதனால் அந்த கருடன் குணம் அடைந்தது. ஆனால் என் மேல் உங்களுக்கு சந்தேகம் இருந்தது. எனக்கு சக்தி இருக்கிறதா என்ற சந்தேகம் உங்கள் மனதில் அதிகமாகவே இருப்பதால், நன்மைகள் கிடைக்க தாமதமாகிறது.

குழம்பிய மனம் குப்பைக்கு சமமானது. நம்பிக்கையோடு இருந்தால்தான் எல்லாமே நன்மையாக முடியும்.” என்றார் அந்த மகான்.

ஆம்…அதுபோல, மகாமக குளத்தில் நீராடினால் கர்மவினை நீங்குமா? என்ற சந்தேகத்துடன் குளித்தால் நீங்காது. நீங்கும் – சுபிக்ஷம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்பவேண்டும். அப்படி நம்பினால்தான் நன்மைகள் நிழல் போல் தொடர்ந்து வரும்
 
Article Source: Bhakthi Planet